Tuesday, December 23, 2014

வாழ்த்துரை - மு.மேத்தா

நண்பர் 'அகில்' அவர்கள் எழுதிய 'திசைமாறிய தென்றல்' வாசகர்களின்
திசையை நோக்கி வருகை புரிந்திருக்கிறது.

என் சோதரராம் ஈழத்துத் தோழர்கள் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் இந்தப் புதினத்தில் சொல்லாமல் சொல்லப்படகின்றன.

பறவைக் கூட்டைக் கலைத்தது போல் இலங்கையில் நடந்த இனக்கலவரம் எங்கள் தமிழர்களின் கூடுகளையும், வீடுகளையும் கலைத்திருக்கிறது. உலகெங்கும் பறந்து அலைந்து எங்கள் தமிழ்ப் பறவைகள் சிறகடித்தும், சிறகுதிர்த்தும் திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் அவலம் - என் நூற்றாண்டின் இதயத்தைக் கீரிய காயம்!

அகில் ஒரு காதல் கதையைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், அதற்குள்ளோ நான் ஒரு தேசத்தின் கதையைப் படிக்கிறேன்.

மூர்த்தி என்ற கதாபாத்திரம் தமிழ் மக்களின் கீர்த்தியைக் கிழிக்கக்கூடியது.

வஞ்சகர்களால் ஏமாற்றப்படுகிறவர்களே வஞ்சகர்களாய் மாறும்போது வாழ்க்கையின் விசித்திரத்தை என்னவென்பது!

தலையில் சூடிக் கொள்ளும் முன்பே உதிர்ந்து போன மலராக இக்கதையில் நம்மைக் கண்ணீர் வடிக்கச் செய்யும் அஸ்வினியை நாம் இதயத்தில் சூடிக் கொள்கிறோம்.

'அகில்' – அவர்களின் புதினம் படிப்பதற்குச் சுவையாகவும், நினைப்பதற்குச் சுமையாகவும் இருக்கிறது.

உலகெங்கும் கேட்கும் சோக ராகங்களின் ஒலி நாடாக்களால் நாமும் மாறி விடுகிறோம்.

நண்பர் அகில் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

நர்மதா பதிப்பகத்தை ஈழத்துத் தோழர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் நடுவே அமைந்திருக்கும் இலக்கியப் பாலம் என்று நான் பாராட்டுவதுண்டு. இந்த நூல் அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

அன்பான வாழ்த்துக்களுடன்,
மு.மேத்தா.

No comments:

Post a Comment