திசை மாறிய தென்றல் (நாவல்)
Wednesday, December 24, 2014
அணிந்துரை - பாலகுமாரன்
இனிய
ஸ்நேகிதங்களுக்கு வணக்கம், வாழிய நலம்.
ஈழத்
தமிழர்கள் நமக்கு அன்னியமானவர்களா, நெருக்கமானவர்களா
என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி
எழுவதுண்டு. அப்படியெனில் எவ்வளவு தூரம் நெருக்கம்,
அவ்வளவு தூரம் விலகல் என்றும்
நான் தொடர்ந்து சிந்திப்பதுண்டு.
நமது
மொழியை பேசுகிறவர்தானே. நம்முடைய தமிழை இன்னும் திருத்தமாக
உச்சரிக்கிறவர்தானே. அவர் பேசுவது நமக்கு
முற்றிலும் புரிந்தாலும் தௌ;ளத்தெளிவாக மனப்
பரிமாற்றம் ஏற்பட்டாலும் மெல்லியதாய் ஒரு விலகல் இருக்கிறதே...
இதற்குக் காரணம் என்ன. இது
எனக்கு மட்டும் இருக்கிறதா அல்லது
எல்லா தமிழர்களுக்கும் இருக்கிறதா என்று உற்றுப்பார்க்க, ஈழத்
தமிழரின் வேதனையை தமிழகம் முற்றிலும்
உணராததன் காரணம் இந்த விலகல்தான்
என்பது எனக்குப் புரிந்தது.
தாம்
ஈழத் தமிழர்களோடு ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று கூறுபவர்களை உற்றுப்
பார்க்கிறபொழுது அதற்குப் பின்னால் அரசியல் காரணங்களும் ஏதோ
தனிப்பட்ட ஆதாயங்களும் இருக்கின்றதே தவிர, வெரு சிலரே,
மிகப் குறைந்த சதவீதமே தமிழர்கள்
என்ற உணர்வோடு அவர்களை அணுகி அவர்கள்
வேதனையை தம்வேதனையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோர் மிகப்பெரிய
சதவிகிதத்தினர் அவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்கள்.
இது
ஒரு நிதர்சனம். சுட்டெரிக்கிற ஒரு உண்மை.
இதற்கு
என்ன காரணம் என்று யோசித்துப்
பார்க்கையில், நமது மொழியாலேயே அவர்கள்
அன்னியப்பட்டிருப்பதுதான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் உச்சரிப்பும், நமது
உச்சரிப்பும் மிக வேறாக இருக்கிறது.
இது
எப்படி விலகலைக் கொடுக்கும். பாலக்காட்டுத் தமிழர் உச்சரிப்பு வேறுதானே.
பெங்களுர் தமிழர் உச்சரிப்பு வேறுதானே.
ஆந்திர எல்லையில் இருக்கும் தமிழர்கள் தெலுங்கு கலந்து பேசவில்லையா, ஏன்,
திருநெல்வேலித் தமிழருக்கும், தஞ்சைத் தமிழருக்கும் வித்தியாசம்
இருக்கிறது என்று பார்த்தால் மற்ற
தமிழ் மொழிகளை விட, இவர்களுடைய
மொழி உச்சரிப்பில் மிகப் பெரிய வித்தியாசம்
இருந்து, இடை இடையே இவர்கள்
என்ன பேசுகிறார்கள் என்று புரியாமலும் போக
வாய்ப்பிருப்பதை நான் உணர்ந்தேன்.
ஆனால்,
ஈழத் தமிழர் பிரச்சினை ஆரம்பத்தில்
இருந்தபோது தமிழ் மக்களை எப்படித்
தாக்கியது, தமிழர்கள் எப்படி கொதித்து எழுந்தார்கள்,
அதன் பிற்பாடு ஏன் மெல்ல மெல்ல
அது மாறிப்போயிற்று என்று யோசிக்கும்பொழுது ஈழத்தமிழர்களுடைய
வேகம் இங்குள்ளவருக்கு பயத்தைக் கொடுத்தது. அவர்களுடைய ஆத்திரம் இவர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இது
மிகப்பெரிய விஷயம் என்று தெரிந்தாலும்,
எனக்கு புத்திக்கு எட்டிய வரையில் இதை
யோசித்துப் பார்க்கின்ற உரிமையில் இதை அணுகுகிறேன். இவர்களுடைய
பிரச்சினைகளை இவர்கள் பேசுவதின் மூலம்
மட்டுமல்லாமல் அவர்களுடைய புதினங்களால் இன்னும் அதிகமாகப் புரிந்து
கொள்ளுகிறேன்.
மிகச்
சசீபமாய் பழம் பண்டிதரின் கடிதங்கள்
என்று கம்பவாரிதி திரு.ஜெயராஜ் அவர்கள்
எழுதிய கட்டுரைகளிலிருந்தே எனக்கு அதிகம் இவர்களைப்
பற்றி அறியக் கிடைத்தது. ஒருமுறை
ஸ்ரீலங்காவிற்கு போய் வந்து அங்குள்ளவர்களைப்
பார்க்கும்போது இன்னும் அதிகமாக உணர
முடிந்தது.
இந்த
திசை மாறிய தென்றல் என்கிற
புதினம் நாடு விட்டு நாடு
போய் எங்கோ நலிந்து உழன்று
தன்னுடைய தாயகம் பற்றிய சிந்தனையாக
இருந்து தாயகம் திரும்பும்பொழுது ஏற்படுகின்ற
சந்தோஷங்களையும், ஏமாற்றங்களையும் தெளிவாக விபரிக்கின்றது. ஈழத்தமிழர்
பற்றிய இங்குள்ளவர்களுக்கு இன்னொரு ஐன்னல் திறக்கப்பட்டது.
இந்த
நாவலைப் படிக்கும்பொழுது அந்த புலம்பெயர்ந்த வேதனையை
நன்கு உணர முடியும். குடும்பத்தை
விட்டு ஒரு மாதம் பப்பாய்க்கு
போக வேண்டும் என்கிறபோதே வயிறு கலங்கும். ஆனால்,திரும்பி வருவோமோ என்ற நினைப்பே
இல்லாமல் அனாதையாக ஊர் விட்டுப் போய்
வேறு ஒரு ஊரில் அடிமைகளாக
வேலை செய்து மெல்ல மெல்ல
உயர வேண்டுமென்று நிர்ப்பந்தப்படுகிறபொழுது அந்த மனம் எத்தனை
வேதனைப்படுகிறது. இயற்கை மாற்றங்களை, உணவு
மாற்றங்களை, கலாச்சார மாற்றங்களை இவ்விதப் புதினங்கள் அழகாகச் சொல்லுகின்றன.
தன்னுடைய
வேதனையை, தன்னுடைய நிலையை, தன்னுடைய மக்கள்
படுகின்ற துயரத்தை வெளியே எழுதி நாவலாக
கொண்டுவர வேண்டுமென்ற ஆசை அற்புதமானது. இது
ஒரு சமுதாயத்தையே இன்னொரு சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும்.
இதனால் கூர்மை பெற்ற பிரச்சினைகளுக்கு
தீர்வு வரும் என்பது இயல்பு.
திசை
மாறிய தென்றல் ஆசிரியருக்கு என்னுடைய
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடாந்து பல புதினங்கள் எழுத
வேண்டுமென்று என் சத்குருநாதன் யோகி
ராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்திக்கிறேன்.
உலகத்தில்
எங்கு தமிழ் பேசினாலும் அந்தத்
தமிழர்களுடைய பிரச்சினை நம் பிரச்சினை என்றுதான்
எனக்கும் தோன்றுகிறது. பிரச்சினைகள் தீர இம்மாதிரியான புதினங்கள்
உதவி செய்யக்கூடும்.
என்றென்றும்
அன்புடன்,
பாலகுமாரன்
பாலகுமாரன்
Tuesday, December 23, 2014
என்னுரை
பிரியமானவர்களே!
இக்கதை எனது கன்னிமுயற்சி. இக்கதையை
வாசித்து நீங்கள் தரும் விமர்சனத்தைப்
பொறுத்தே என் சிந்தையில் வட்டமிட்டுக்
கொண்டிருக்கின்ற மற்றுமோர் காதல் கதைக்கு என்னால்
பாதையமைக்க முடியும்.
பரீட்சை
செய்துவிட்டு பெறுபேறுக்காக் காத்துக் கொண்டிருக்கின்ற மாணவனைப்போல உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனத்துக்காகக் காத்திருக்கிறேன்.
மேலும்
இதைக் தொடர்கதையாக வெளியிட்ட 'கனடா உதயன்' பத்திரிகை
ஆசிரியர் ஆர்.லோகேந்திரலிங்கத்துக்கும், இந்த நூலை
அழகொளிர அச்சிட்ட நர்மதா பதிப்பகத்தாருக்கும்
மற்றும் திரு.பாலகுமாரன், திரு.மு.மேத்தா, திரு/திருமதி
அருண்மொழி, பூங்கோதை, திரு.பார்த்திபன் ஆகிய
நண்பர்களுக்கும் நன்றி!.
பிரியமுடன்,அகில் (2002)
FIRST EDITION: 2002
SECOND EDITION: 2004
FIRST EDITION: 2002
SECOND EDITION: 2004
நூலாசிரியரைப் பற்றி....
படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு.
படைப்புக்கள்:-
நாவல்கள்: படைப்புக்கள்:-
- திசைமாறிய தென்றல் - 2002
- கண்ணின் மணி நீயெனக்கு - 2010
குறு நாவல்:
- மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - 2012 - குங்குமசிமிழ்
சிறுகதைத் தொகுப்பு:
- கூடுகள் சிதைந்தபோது - 2011
ஆன்மீக நூல்கள்:
- நமது விரதங்களும் பலன்களும் -2002
- இந்து மதம்: மறைபொருள் தத்துவ விளக்கம் - 2004
பரிசுகள்:
- பதவி உயர்வு - ஞானம் சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - பரிசு - 2009
- பெரிய கல்வீடு - அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுதைப் போட்டி – ஆறுதல்பரிசு - 2010
- வலி - ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு – 2010
- கூடுகள் சிதைந்தபோது – முதலாம் பரிசு – ஞானம் சஞ்சிகை நடாத்தும் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2010
'கூடுகள் சிதைந்தபோது' நூலுக்கு கிடைத்த விருதுகள்:
- தமிழ் நாடு அரசின் அயலகப்படைப்பிலக்கியத்திற்கான விருது – 2011
- கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது - 2011
- மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது – 2011
- கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம் விருது - 2011
- புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விருது – 2011
- கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது – 2011
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி விருது - 2012
- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது - 2012
இவர் பற்றி:
- இவருடைய படைப்புக்கள் இந்திய ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது, ராணி வாரமலர், ஈழத்து வீரகேசரி, தினக்குரல், மல்லிகை, ஞானம், உண்மை, முரசொலி, கனடா உதயன், செந்தாமரை, ஈழநாடு, கனடா முரசொலி, தமிழ்டைம்ஸ், தமிழ்பூங்கா என்பவற்றில் வெளிவந்துள்ளன. உலகத் தமிழ் எழுத்தாளர்களுடைய விபரங்களை ஒன்று திரட்டி, அதனை இணையத்தளத்தில் ஆவணப்படுத்தும் முகமாக எழுத்தாளர் இணையத்தளம், அதாவது தமிழ்ஆதர்ஸ்.கொம் (www.tamilauthors.com) என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Comments (Atom)









